பொருளாதார சுதந்திரமும் நிஜமான சுதந்திரமும்: இலங்கையின் நிலை

சுதந்திரம் என்பது வெறுமனே அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. ஒரு தனிமனித னாயினும் ஒரு நாடாயினும் பொருளாதார சுந்தந்திரமே, ஏனைய சுதந்திரத்தை அனுப்பவிக்கவும், அணுகுவதற்கும் வழி வகுக்கும்.

 உள்ளூரிலும்  தேசிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் குறைந்த செலவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களின் குறைந்த தலையீட்டுடன்  சுதந்திரமாக வர்த்தகத்தை மேற்கொள்வதே பொருளாதார சுதந்திரத்தின் வரைவிலக்கணமாக கொள்ளலாம். இலங்கை வாழ் மக்களாகிய நாம் சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்தின் இப்போதைய நிலை என்ன?

 கடந்த 77 ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாம் இலங்கையை வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக பல்வேறு உத்திகளை   கையாண்டு வந்துள்ளோம். இருப்பினும்,   நிஜமான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நாம் பயணித்துள்ளோமா என்பது கேள்விக்குறியே. நாம்  அரசியல் சுதந்திரம் பெற்றபோது, மானிட அபிவிருத்தியில்( உதாரணமாக எழுத்தறிவு வீதம், ஆயுள் எதிர்ப்பார்க்கை வீதம் )  ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே சிறந்த நிலையில் இருந்தோம் என்பதே நிதர்சனம். ஏன் சிங்கப்பூர்(அன்றைய மலாயா ) கூட எங்களுக்குப் பின்னால் இருந்தது. இலங்கையை அவர்களின் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையின் சுதந்திரத்தின் பெரும்பகுதி பெயரளவான சுதந்திரமாகவே இருந்து வந்துள்ளது, பொருளாதார சுதந்திரத்தின்  மூலம் கிடைக்கப் பெற்று இருக்க கூடிய ஆதாயங்களை நிலைபேறான வளர்ச்சிக்கு உட்படுத்த தவறி  விட்டோம்.  சிங்கப்பூர், ஜப்பான் போன்ற  ஏனைய நாடுகளும் இலங்கையை வெறுமனே உதாரணமாகக் கொள்ளாமல் பொருளாதார சுதந்திரத்தின் கூறுகளை பல்வேறு நிலைகளில் நிலைநிறுத்தி இன்று உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன.

 வளங்களை உகந்த முறையில் மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப   உத்தமமனா முறையில் பயன்படுத்துதல்  என்பது ஒரு  திறனாகும் வரையறுக்கபட்டதும் அருமையானதுமான  இயற்கை கனிய , மானிட  வளங்களை திறம்பட பயன்படுத்துவதும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதுமே செல்வச் செழிப்புக்கு வழிவகுக்கும் .தனிநபர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க உரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசாங்கம் சந்தைகளில் தலையிடாமல், தனிநபர்கள் தொழில் செய்து செல்வம் உருவாக்க ஊக்குவிக்க வேண்டும். மேலும், போட்டித்தன்மை வாய்ந்த சந்தை நிலைமைகளை உருவாக்க வேண்டும். அரசாங்கம் குறைந்தபட்ச ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு, போட்டியை உறுதி செய்வதும் . பணத்தின் பெறுமதியை  பேணுவதி  ஒரு அரசாங்கத்தின் முதன்மை  கடமையாகும் .

 இந்த ஐந்து கோட்பாடுகளையும் பின்பற்றுவதன் மூலம் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை பொருளாதார சுதந்திரத்தின் உலக குறிகாட்டி  உணர்த்துகின்றது. அதிக பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகமாகவும், வறுமை குறைவாகவும் உள்ளது. கடந்த 77 ஆண்டுகளில், பொருளாதார சுதந்திரத்தின் தற்பரியத்தை  நாம் சரியாக அனுபவிக்க தவறிவிட்டோம். அரசுவுடமையுள்ள வணிக  நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் நில உரிமையை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்தி உயர்  பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .

 சிங்கப்பூர் அன்று எம்மை உதாரணமாகக் கொண்டார்கள், நாம் அவர்களை உதாரணமாக கொள்ள வேண்டிய காலம் இது. இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத போதும் பொருளாதார சுதந்திரத்தை திறம்பட கடைப்பிடித்ததன்   மூலம் உலகிலேயே முன்னுதாரணமான ஒரு  நாடாக திகழ்கிறது. பொருளாதார சுதந்திரம் ஒன்றே உண்மையான சுதந்திரத்தை ஏற்படுத்த வல்லது.

 பொருளாதார சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரத்தைப் போன்று ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இலங்கையில் பொருளாதார சுதந்திரம் என்பது குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது பொருளாதார சுதந்திரம் மிகக் குறைவாக முன்னுரிமை படுத்தபட்டுள்ளது.   இவற்றினை கவனத்தில் கொள்ளுகின்ற போது  உற்பத்தி திறன்  மேம்படுவதற்கான  வாய்ப்பு அதிகரிக்க படுவதோடு  உலக சந்தையில் போட்டியிடுவதற்கான உயர் உற்பத்தி திறன் வாய்ந்த நவீன அறிவுடைய  பொருளாதாரமாக  இலங்கை உருமாற்றம்  செய்ய முடியும்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ஆக்கம் : அபிஷாயினி கிருஷாந்